ஸ்வைன் புளூ’ பரவிய காலத்தில் ஊரடங்கு இல்லாமல் போனதற்கு காரணம்
ஸ்வைன் புளூ’ பரவிய காலத்தில் ஊரடங்கு இல்லாமல் போனது ஏன்?
‘ஸ்வைன் புளூ’ பரவிய காலத்தில் ஊரடங்கு, சமூக விலகல், முக கவசம் என்று மருத்துவம் சாராத தற்காப்புகள் இல்லாமல் போனது தொடர்பான சில கருத்துக்கள்.
கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்புவரை இந்த 21-ம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட தொற்று நோய்கள் சார்ஸ், மெர்ஸ், எபோலா மற்றும் ‘ஸ்வைன் புளூ’ என்னும் பன்றிக்காய்ச்சல்.
இவற்றைப் பற்றி அறியாதவர்களுக்காக சுருக்கமாக சில தகவல்கள்.
சார்ஸ்: பிறப்பிடம், சீனாவின் குவாங்டோங்க் மாகாணத்தின் சுன்டே நகரம். வவ்வால்களில் இருந்து பரவி மனிதர்களை தாக்கியது. 2002-ல் தொடங்கி 2004 வரை நீடித்தது. பரவிய நாடுகளின் எண்ணிக்கை 25. மொத்த பலி 774. சீனாவில் மட்டும் பலி 648.
மெர்ஸ் : பிறப்பிடம், சவுதி அரேபியா. ஒட்டகம் மூலம் மனிதர்களுக்கு பரவியது. 2012 முதல் 2015 ஜூலை வரை உச்சபட்ச தாக்கம் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து என 27 நாடுகளில் பரவியது. பலியானோர் எண்ணிக்கை 866. இன்றும் இந்த வைரஸ் மறையாமல் உள்ளது.
எபோலா: முதன் முதலில் 1976-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள, இன்றைய காங்கோ குடியரசில் தோன்றியது. நோயுற்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியது.
எபோலா என்ற நதிக்கரை அருகே, புதிய வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டதால் நதியின் பெயரே அந்த வைரசுக்கும் வைக்கப்பட்டது. பின்னர் கினியா நாட்டில் 2013 டிசம்பர் முதல் 2016 மே மாதம் வரை விசுவரூபம் எடுத்தது. பாதிக்கப்பட்ட நாடுகள் 14. பலியானவர்கள் எண்ணிக்கை 11,323.
‘ஸ்வைன் புளூ’ (ஹெச்1 என்1): பிறப்பிடம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம். பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது. இதனால் ஏற்பட்ட காய்ச்சலுக்குத்தான் பன்றிக் காய்ச்சல் என பெயர் சூட்டப்பட்டது.
இந்நோய் தீவிரமாக நீடித்த காலம் 2009 ஏப்ரல் 12-ந் தேதி முதல் 2010 ஏப்ரல் 10-ந் தேதி வரை. பாதிக்கப்பட்ட உலக நாடுகள் 117. பாதிக்கப்பட்டோர் 140 கோடி. பலி எண்ணிக்கை 1.5 லட்சம். அதிகபட்ச உயிரிழப்பு மதிப்பீடு 5.75 லட்சம். அமெரிக்காவில் மட்டும் பலியானவர்கள் 12,469. இந்தியாவில் உயிரிழப்பு 833.
2009-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி பன்றிக் காய்ச்சலைப் பெருந்தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
சார்ஸ், மெர்ஸ் ஆகிய இரண்டு வைரசுகளும் கொடியவைதான். ஆனாலும் இவை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியபோது அதிக அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தின. இதனால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க முடிந்தது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு சில மருத்துவ பணியாளர்கள் மட்டுமே இந்த வைரசுகளால் பாதிக்கப்பட்டனர்.
எபோலாவைப் பொறுத்தவரை அது ஆப்பிரிக்க மக்களை மட்டுமே அதிகமாக பதம் பார்த்தது. அதைக் கடந்து வெளியே அதன் தாக்கம் மிகக் மிக குறைவு.
ஆனால் பன்றிக் காய்ச்சல் வீரியம் மிக்கதாக இருந்தது. இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படையாக தெரிந்தன. மற்றவர்களை பாதித்தபோதும் உடனடியாக அறிகுறிகள் வெளிப்பட்டன.
பாதிக்கப்பட்ட ஒரு நபர் 1.46 நபர்களுக்கே நோயை பரப்பும் தன்மையை கொண்டிருந்தார். மேலும், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு ‘ஸ்வைன் புளூ’ வைரஸ் தொற்றிக் கொள்ளும்போது அதன் வேகம் தணிந்து காணப்பட்டது.
தற்போதைய புதிய கொரோனா வைரஸ் போல மின்னல் வேகத்தில் உடலுக்குள் ஊடுருவி அமைதியாக 14 நாட்கள் அடைகாத்து மனித உயிர்களை குடிக்கவில்லை.
பன்றிக் காய்ச்சல் மெல்ல மெல்ல சீராக பரவி முதல் 5 மாதங்களுக்கு பின்பே அதிக மனிதர்களை கொன்றது. இதனால் மருத்துவ உலகம் விழிப்படைந்து பன்றிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. எனவேதான் 140 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.
அதேநேரம், கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் பரவினால் 2.2 பேருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டது.
தற்போது, 5.7 பேர் வரை அது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள் வயிற்றில் புளியை கரைக்கின்றன. இப்படி ஒருவர் அதிகபட்சம் சுமார் 400 பேருக்கு கொரோனா வைரசை பரப்பி விடமுடியும். (கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 லட்சம் உயிர்களை கொரோனா காவு வாங்கி விட்டது. இது அடுத்த மாத(மே) இறுதிக்குள் 6 லட்சம் பேரை பலி வாங்கி விடும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது). இது தவிர, பன்றிக் காய்ச்சலை விட புதிய கொரோனா வைரஸ் 10 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.
அதே நேரம் கொரோனா தாக்கியதற்கான அறிகுறி 80 சதவீதம் பேருக்கு தெரிவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே அவர்களை கண்டறிய முடிகிறது. மேலும் ஒருவர் தும்மினாலும், இருமினாலும் அவரிடம் இருந்து வெளியேறும் கொரோனா வைரஸ் எளிதில் இறந்து போவதில்லை. பல மணி நேரம் வரை உயிர் வாழ்ந்து மனிதர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதைத் தொடுபவர் களிடம் உடனடியாக தொற்றிக்கொள்கிறது. மேலும் அது உடலுக்குள் புகுந்த உடன் நுரையீரலைத்தான் குறி வைத்து தாக்குகிறது.
இந்த சங்கிலித்தொடரை தகர்த்து எறியத்தான் ஊரடங்கு, சமூக விலகல், முக கவசம் என்று மருத்துவம் சாராத தற்காப்புகள் கொரோனாவை எதிர்த்து போராட தேவைப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல் வந்தபோது இதுபோன்ற விழிப்புணர்வு முறைகள் அதிகம் பேசப்படவில்லை, மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகளும், தடுப்பு மருந்துகளும் துரிதமாக தயார்படுத்தப்பட்டன.
மேலும், இந்த நோயின் தன்மையை பாதிப்பு ஏற்பட்ட 11 நாட்களில் அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்ததால் உலக நாடுகள் விழிப்படைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கின (மெக்சிகோ மட்டும் 2009 ஏப்ரல் 30-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது). இதற்கான தடுப்பு மருந்துகளும் 2009-ம் ஆண்டின் நவம்பர் மாதம் தயாராகி விட்டது.
எனவேதான், பன்றிக் காய்ச்சல் காலத்தில் ஊரடங்கு, சமூக விலகல் என்ற பேச்சுக்கு அதிக இடமில்லாமல் போனது என்பது உண்மை.
செ ஏ துரைபாண்டியன்
Comments