ஆடுவோமே என்று நடனம் ஆட முடியாத நிலையில் உலகம்
உலக நடன தினம்
ஒவ்வோர் ஆண்டும் உலக நடன தினம் (International Dance Day) ஏப்ரல் மாதம் 29ம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக கொண்டாடப்படுவதில்லை.
நடனம் (Dance ) நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. பரதம் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும்.
பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் 'பரதம்' என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல் ப- பாவம், ர- ராகம், த- தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
மேலை நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே, டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.
பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.
சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறார்.
சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது.
மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது.. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்,
ஆந்திராவில் குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்
கர்நாடகாவில் யக்ஷகானம்:
ஒரிஸ்ஸாவில் ஒடிசி:
மணிப்பூரில் மணிப்புரி, லாய்-ஹரோபா,
பஞ்சாப்பில் பாங்ரா, கிட்டா,
பீகாரில் பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி,
அஸ்ஸாமில் பிகு,
ஜம்மு-காஷ்மீரில் சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.
நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை . பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி என சுருக்கமாக கூறுவர்.
இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.
தென்னிந்திய கிராமிய நடனங்கள்- தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம்.
வட இந்திய கிராமிய நடனங்கள் - டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி.
கிழக்கிந்திய கிராமிய நடனங்கள்- நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள் கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ.
1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து செய்யப்படுகின்றன.
இச்செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ''உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை'' என்றார்.
2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள், நடன நிறுவனங்கள் தமது பிரேரனைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பள்ளிகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல், நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப்படுத்துதல், வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
1981ல் நடனத்திற்கு முறையான அங்கீகாரம் பெற நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்று Coalition for National Dance Week உருவாக்கப்பட்டுள்ளது
உலகமே கொரானா என்ற நச்சுத் தொற்று நோய் பீதியில் இருக்கும்போது மனதிற்கு இதமளிக்கும் என்ற வகையில் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து இரசிக்கக்கூடிய நடனங்கள் சில பற்றிய சில இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விரும்பினால் இணைப்பில் பாருங்கள்.
செ ஏ துரைபாண்டியன்
https://www.youtube.com/watch?v=3mtavE5YBG4
https://www.youtube.com/watch?v=nmJzxqIOQdo&list=RDnmJzxqIOQdo&start_radio=1&t=36
https://www.youtube.com/watch?v=9qV-11UracQ
https://www.youtube.com/watch?v=6_b9DzTPGF0&list=RDnmJzxqIOQdo&index=3
Comments