இந்திய சினிமாவுக்கு ஓர் இழப்பு
நடிகர் #இர்ஃபான்கான் மறைந்துவிட்டார் என்பது ஓர் அதிர்ச்சி அளிக்கும் செய்தி . உண்மையில் இந்திய சினிமாவுக்கு ஓர் இழப்பு. இவ்வளவு இளம் வயதில் (52) அவர் இறந்தது ஒரு துரதிர்ஷ்டம்.
நடிகனுக்கு உடல் என்பது ஒரு கருவி. அதை நுட்பமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர் இர்பான் கான்.
மரம் அறுப்பதற்கும் மரச் சிற்பம் செய்வதற்கும் ஆன இடைவெளி ஒரு மோசமான நடிகருக்கும் நல்ல நடிகருக்கும் ஆன இடைவெளி ஆகும்.
பொதுவான மேலோட்டமான நடிப்பு என்பதிலிருந்து நுட்பமான நடிப்பை நோக்கி முன்னேறுவது என்பது ஒரு நடிகன் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு பயணம். வருத்தமும் வலியும் கொடுக்கும் பொறுமையான நீண்ட பயணம். அதில் வெல்வது தன்னையே வெல்வதாகும். அது தரும் உவகை பணம் , புகழ் இவற்றைத் தாண்டியது. இந்த உவகையைப் பெற நினைக்கும் கலைஞன் பொதுப் பாதையில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்பவன். இதனால் வரும் இழப்புகளுக்கு அஞ்சாதவன். அவர்களில் ஒருவர் இர்ஃபான்.
நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் பயின்றதில் இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்தது வரை இர்பான் கான் பயணம் செய்தது அவரது தொடர் உழைப்பினால் கிடைத்த பயன்.
உலகத் திரைப்படங்களில் ஒரு இந்திய நடிகர் தலை காட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
'ஸ்லம்டாக் மில்லியனர்', 'லைப் ஆஃப் பை' போன்ற
ஹாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான்.
இவை அவரை சர்வதேச கவனம் பெற வைத்தவை.
அவருடைய 'லஞ்ச் பாக்ஸ்' பரவலான கவனத்தை பெற்ற அழகான காதல் காவியம் ஆகும்.
இன்னும் பல இடைநிலைப் படங்களில் தன் பங்களிப்பைச் செலுத்தியவர் இர்பான் கான்.
பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய விருதுகளைத் தன் திரைக்கலை பங்களிப்புக்காகப் பெற்றவர் இர்ஃபான்.
அவரது மறைவு உண்மையிலேயே நடிப்புக் கலைக்கும் இந்தியத் திரை உலகிற்கும் ஒரு பேரிழப்பாகும்.
ஒரு தூரத்து ரசிகனாக
அவருக்கு என் அஞ்சலி.
*
- பிருந்தா சாரதி
திரை எழுத்தாளர் , இயக்குநர்.
*
Comments