குழந்தை பெற்றபின் உயிரிழந்த செவிலியர்
குழந்தை பெற்றபின் உயிரிழந்த செவிலியர், சில நாள்கள் முன் தந்தையையும் பறிகொடுத்த அவலம்!
பிரிட்டனில் அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில் கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் தந்தையும்கூட சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்த துயரம் நேர்ந்திருக்கிறது.
28 வயது நிறைமாதக் கர்ப்பிணியான அந்த செவிலியர் பற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.
மருத்துவ சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரான கறுப்பினப் பெண் மேரி அகியாபாங், முந்தைய செவ்வாய்க்கிழமை கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை மிக மோசமாக சீர்குலைந்தது. உடனே குழந்தையை மட்டுமேனும் காப்பாற்றிவிட வேண்டுமென அவசரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
லூட்டன் - டன்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர், அடுத்த சில நாள்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துவிட்டு, உயிர்ப்புத் திருநாள் அன்று ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
உயிரிழந்த செவிலியர் மேரி அகியாபாங்கின் மகளுக்கும் மேரி என்றே பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மருத்துவமனைக்கு மேரி அழைத்துவரப்பட்ட நாளில்தான் கரோனா அறிகுறிகளுடன் அவருடைய தந்தையும் உயிரிழந்திருக்கிறார். தந்தையின் உயிரிழப்புக்கு கரோனாதான் காரணமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
அடுத்தடுத்து தந்தையும் மகளும் இறந்த நிலையில் மேரியின் குடும்பமே பெருந்துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.
மேரிக்கு ஏற்கெனவே இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேரி பேறுகால விடுமுறையில்தான் சென்றிருந்தார். எனவே, மருத்துவமனை நோயாளிகளின் வழியே அவருக்கு கரோனா தொற்றியிருக்க வாய்ப்பில்லை. வெளியே எங்கேயோ சென்றிருந்தபோதுதான் தொற்றியிருக்க வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிறந்த பெண் குழந்தைக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. மேரியின் கணவர் எர்னஸ்ட்டும் கரோனா காரணமாகத் தனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாகத் தங்களுடைய மருத்துவமனையில் செவிலியர் மேரி பணியாற்றி வந்தார் என்றும் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் அவர் என்றும் பெட்போர்ட்ஷயர் மருத்துவமனைத் தலைமை அலுவலர் டேவிட் கார்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் செ ஏ துரைபாண்டியன்
நன்றி தினமணி 18-04-2020
Comments