இந்தியாவில் 3 வகை கொரோனா வைரஸ்கள் பரவுகின்றன

இந்தியாவில் 3 வகை கொரோனா வைரஸ்கள் பரவுகின்றன


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அதிர்ச்சி தகவல்


 

 


டெல்லி :   இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மொத்தம் 3 வகை  என்று  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீனா, ஈரானில் பரவும் கொரோனா வகை வைரஸ்கள் இந்தியாவிலும் பரவி வருகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
உலகில் 2 வகை வைரஸ்கள்


டிஎன்ஏ வகை வைரஸ்கள், ஆர்என்ஏ வகை வைரஸ்கள் என பொதுவாக இரண்டு வகை உலகில் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றி தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும்போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும்.


            ஆனால் ஆர்என்ஏ வகை வைரஸ்கள் அப்படி கிடையாது. இந்த வைரஸ் ஏ  என்ற  நபரில்  இருந்து  பி  என்ற  நபருக்குப்  பரவும்போது அதன் ஆர்என்ஏ அமைப்பு மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது அந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். இதனால்தான் ஆர்என்ஏ வகை வைரஸ்களுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கக் கடினமாக உள்ளது. ஆர்என்ஏ வகை வைரஸ்கள் எப்போது உருமாறும், எப்படி தன்னுடைய செல்களை மாற்றிக்கொள்ளும், எப்போது வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது


 


தற்போது  பரப்பி வரும் கொரோனா வைரஸ் இதேபோன்ற ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இதனால் இதை டெஸ்ட் செய்வதும், அதற்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதும்  மிக  மிகக் கடினமாக இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆர்என்ஏவில் உருமாற்றம் அடைந்து அப்டேட் ஆகிறது. அதாவது இந்த வைரஸின் உட்பகுதியில் இருக்கும் புரதங்கள், அதன் வடிவங்கள், செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைகிறது.

                                    கொரோனா வைரஸில் 4 வகை


சீனாவில் வுஹானில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா சென்ற பின் கொஞ்சம் உருமாற்றம் அடைந்துள்ளது.  சீனாவில் இருக்கும் கொரோனாவின் தோற்றமும், அமெரிக்காவில், ஐரோப்பாவில் பரவும் கொரோனாவின் தோற்றமும் ஒரே மாதிரி இல்லை. இதில் சில விஷயங்கள் மாறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இப்படி ஆர்என்ஏ வைரஸ் தன்னை அப்டேட் செய்து கொள்வதை Mutation என்று அழைப்பார்கள்.

            கொரோனா வைரஸ் இப்படித்தான் mutate ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது வரை 4 வகையில் இந்த கொரோனா வைரஸ் mutate ஆகியுள்ளது. அதன்படி சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வகை ஒன்று, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்  பரவி வரும் வைரஸ் வகை இரண்டு,  ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் வைரஸ் வகை மூன்று, இத்தாலி, ஸ்பெயினில் பரவி வரும் வைரஸ் வகை நான்கு ஆகும்.


   இந்தியாவில் 3 வகை வைரஸ்கள் பரவல்


இதில் இந்தியாவில் மூன்று வகையான கொரோனா பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். முதலில் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து நேரடியாக வந்தது. அதன்பின் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவும் வகையைச் சேர்ந்தது. அதன்பின் தென் மாநிலங்களில் பரவும் கொரோனா வைரஸ் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் வகையைச் சேர்ந்தது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு நுழைந்த பின் அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதாவது இந்தியாவிற்குள் இந்த வைரஸ் mutate ஆகவில்லை. இதனால் தற்போதைக்கு பிரச்சனை இல்லை.


அதேபோல் கொரோனா வைரஸ் வேகமாக உருமாற்றம் அடையும் வைரஸ் இல்லை. இதனால் இப்போது கவலை அடைய தேவை இல்லை. ஆனால்  தற்போது  இந்தியாவில் பரவும் வைரஸ் எந்த வகையைச் சேர்ந்தது  என்று  கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவில் அதிகமாக பரவும் வைரஸ் அமெரிக்காவில் இருந்து வந்ததா?  ஈரானில் இருந்து வந்ததா? அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க வேண்டும்.   இதன் மூலம்தான் அதை எப்படி கட்டுப்படுத்த முடியும். அதன் குணாதிசயம் என்ன என்று கண்டுபிடிக்க முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  இது தொடர்பாக ஆராய்ச்சி நடக்கிறது. விரைவில் இதன் முடிவுகள் வரும் என்று  தெரிவித்துள்ளனர்.


செ ஏ துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி