வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
உப்புச் சத்தியாகிரகம் நினைவு நாள்
இந்தியாவில் ஆங்கிலேய அரசு இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, அண்ணல் மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) மேற்கொண்டது என்பது அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும்.
இப்போராட்டம், மார்ச்சு 12, 1930 இல் தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி அடிகள் தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார்.
உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.
தண்டி நடைப் பயணம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யக் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 30 ஏப்ரல் 1930 அன்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.
இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில், நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் திருவாளர்கள் ஏ. என். சிவராமன், ஜி. ராமசந்திரன், துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் இராஜூ, ஜி. கே. சுந்தரம், ஓ. வி. அழகேசன், ரா. வெங்கட்ராமன், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா முதலிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சர்தார் வேதரத்தினம் பிள்ளை போராட்டக் குழுவினர்களுக்கு அனைத்து வகையிலும் உதவினார். இப்போராட்டத்தின் விளைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை, இராஜாஜி உட்பட பலர் கைதாகி ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டிடம், வேதாரண்யம் மேலவீதியில் இராஜாஜி தலைமையில் போராட்ட குழுவினர் தங்கியிருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி நினைவுப் பூங்கா, இராஜாஜி சிறை வைக்கப்பட்டிருந்த உப்புத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள சிறை ஆகியவை வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
செ ஏ துரைபாண்டியன்
Comments