உலக இட்லி தினம்

உலக இட்லி தினம்


இன்று 30.3.2020 உலக இட்லி தினம்


     இட்லியைப் பற்றி தெரியாத  தமிழர்களே இருக்க முடியாது.    இந்த இட்லி பற்றி  கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  


உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்ததன் அடிப்படையில் கடந்த 2015ம்  ஆண்டு  முதல்  உலக இட்லி  தினம்  கொண்டாடப்படுகிறது.


இட்லி (இட்டளி)) என்பது அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு கலந்து  செய்யப்படும் ஒரு உணவு. இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது.   இது இட்டவி (இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறைதான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்


 


பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும்பெரும்பாலானதொட்டுக்கொள்ளும் உணவுகள் சட்னி,  சாம்பார், வடைகறி,  கொத்சு, கார சட்னி, புதினா சட்னி,   மற்றும்  மிளகாய்ப் பொடி / இட்லி பருப்புப்  பொடி, காய்கறி குருமா.  சில நேரங்களில் குழம்பு வகையும் சேர்த்துக் கொள்ளப்படும்.


இட்லி செய்முறை



  • ஒரு பங்கு உளுத்தம் பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம் பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.

  • அரிசியையும் உளுத்தம் பருப்புவையும் தனித்தனியாக ஊற வை. சுமார் 3 மணிநேரம் ஊறவை. முழு உளுத்தம் பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.

  • அரிசியையும், உளுத்தம் பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக் கொள். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக் கொள்.

  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல் நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.

  • இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை. வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவற்றைக் கொண்டது இட்லி சட்டி.

  • புளித்த மாவினை இட்லி தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.


பொதுவாக, இட்லியை மல்லிப்பூ போல் செய்ய, அரிசியின் தரம், அளவு, உளுந்தின் அளவு, அறைக்கும்போது ஊற்ற வேண்டிய தண்ணீர் அளவு, கெட்டியாக அறைக்க வேண்டிய விதம், சேர்க்க வேண்டிய உப்பு அளவு, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப புளிக்க வைக்க வேண்டிய நேரம், கை பக்குவம் என பல உண்டு.  அப்போதுதான் அது பூப் போல இருக்கும் என்பதோடு மட்டுமல்ல, புளிக்காமலும் இருக்கும். .   


 


இட்லியில் பல வகை உண்டு. அவற்றில் சில:



  • மல்லிப்பூ இட்லி

  • டம்பளர் இட்லி

  • செட்டிநாடு இட்லி

  • மங்களூர் இட்லி

  • காஞ்சிபுரம்இட்லி  (டம்ளர்  வடிவம்)

  • ரவா இட்லி

  • சவ்வரிசி இட்லி

  • சேமியா இட்லி

  • ஐந்து பருப்பு இட்லி

  • புதினா இட்லி

  • சத்துமாவு இட்லி

  • கறிவேப்பிலை பொடி இட்லி

  • தக்காளி இட்லி

  • ராகி இட்லி

  • பனீர் இட்லி

  • சுக்கு திப்பிலி இட்லி

  • நிவாரண் இட்லி

  • இந்திய கொடி வண்ண இட்லி

  • லாலி பாப் இட்லி

  • பிளேட் இட்லி

  • ஸ்டப்டு இட்லி

  • சோயா இட்லி

  • நூடுல்ஸ் இட்லி

  • முளை கட்டிய பயறு இட்லி

  • ட்ரை நட்ஸ் இட்லி

  • மிளகு இட்லி

  • சவ்வரிசி இட்லி

  • தேங்காய் பால் இட்ல

  • பூண்டு இட்லி

  • ஓமம் இட்லி

  • குல்கந்து இட்லி

  • பூரணம் இட்லி

  • சாக்லெட் இட்லி

  • மிக்கி மவுஸ் வடிவ இட்லி

  • குங்பூ இட்லி

  • குஷ்பு இட்லி- கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முக்கியத்துவமுடையது.

  • குட்டி இட்லி  - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.

  • சாம்பார் இட்லி- ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.

  • பொடி இட்லி- இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும்.


           ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது. இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து  கிடைக்கும்.  இதனாலேயே பெரும்பாலான நோயாளிகளுக்கு  எளிதில்   செரிக்கக்கூடிய உணவு கொடுக்க வேண்டுமென்றால், இட்லியைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.   குறிப்பாக,  முதியவர்கள்,  ஓய்வை நாடுபவர்கள்   இரவு நேரங்களில் மட்டுமின்றி, காலை சிற்றுண்டியாக இட்லியை  சாப்பிட வேண்டுமென்று பொதுவாக  மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த இட்லி  உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவு. 


                கோயமுத்தூரை சேர்ந்தவர் இனியன், பள்ளி படிப்பை 8 ஆம் வகுப்போடு கைவிட்ட இவர், ஆட்டோ டிரைவாக பணி யாற்றியபோது இட்லி செய்வதில் கைதேர்ந்த  பெண்ஒருவரிடம்   இத்தொழிலைக் கற்றுக் கொண்டு இட்லி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். தொடர்ந்து  2013-ல், 128 கிலோ எடை கொண்ட  இட்லியை தயாரித்து  கின்னஸ்  சாதனை படைத்தார். அதில் திருப்தி அடையாத அவர், 2019 ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு ஓரிரு நாட்களுக்கு முன் 2000 வகை இட்லியை தயாரித்து மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைத்து மக்களின் கவனத்தை ஈர்ந்தார்.  அதில் முக்கியமானது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவத்திலும், அன்னை தெரசா உருவத்திலும் இட்லி தயாரித்ததுதான்.


   செ ஏ  துரைபாண்டியன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி