டி. எம். சௌந்தரராஜன் தனி சகாப்தம்

 


24-03-1922 அன்று பிறந்த  சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம்  கொண்டிருந்த,   திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட டி. எம். சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அய்யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி  ஐயங்காரிடம் முறைப்படி இசைப் பயிற்சி பெற்றவர்.


மதுரை தெற்கு மாசி வீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம். சவுந்திரராஜன், இரண்டாவது மகனாகப்  பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்தவருக்கு,   பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு 1946ம் ஆண்டு "தேவகி' என்ற சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம்' திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி'  என்ற பாடலை பாடும் முதல் வாய்ப்பு தேடி வந்தது. அப்படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார்.  முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது.


திரையுலகில் அன்று தொடங்கிய   பணி  60 ஆண்டு காலம் தொடர்ந்தது.  


எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை  நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.
கதாநாயகர்களுக்கு  தகுந்தாற் போல்  பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார் என, போற்றப்பட்டார். "இசை சக்கரவர்த்தி' "ஏழிசை மன்னர்' "ஞானகலா பாரதி' போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி, மத்திய அரசு, "பத்மஸ்ரீ' விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.


முருக பெருமான் மீதான, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்", "உள்ளம் உருகுதய்யா முருகா" "உனை சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா" போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தவர் அவர்.


தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., - சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை. இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவர் புகழை என்றும் பறை சாற்றுபவை.
அவர் பாடிய, "சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம்" முதலிய பாடல்கள், என்றென்றும் மறக்க முடியாதவை


தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும் ஆற்றல் பெற்றவர். அவர் பாடிய, உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், கேட்பவரை இறைநிலைக்குக் கொண்டு சென்றன.


அவர் பாடிய பக்திப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், மான உணர்ச்சி பாடல்கள் என, அனைத்துப் பாடல்களும், காலத்தை வென்றவை.


தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்... தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.


அவரது குரலில் காதல் கசிந்தது; சோகம் இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், அவர் ஒருவர்தான்.


 "அன்பை தேடி' என்ற திரைப்படத்தில், "சத்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்' என்றும் துவங்கும் பாடலிலும், "சூரிய காந்தி' என்ற படத்தில், "ஓ... மேரி தில் ரூபா' என்று துவங்கும் பாடலிலும்,
அவர் யாருடன் இணைந்து பாடினார் தெரியுமா?


 


1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார்.


இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார்.


மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது.


தமிழக அரசின் "கலைமாமணி' உட்பட பல விருதுகளை பெற்றார்.


 நீளமான குடுமி, வடகலை நாமம் அவரின் ஆதி நாளைய அடையாளங்கள்.   கோவை வருவதற்கு முன் இக்கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு, பின் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக்கொண்டு நாமத்தை அகற்றி, விபூதி பூசிக்கொண்டார்.  


 


`பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.   இப்படி  இன்னமும் பல எழுதிக் கொண்டே போகலாம். 


(வேறு ஒரு முறை எழுத்து தொடரும்)


செ .ஏ.துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி