மாசி மாத மகத்துவங்கள்
மாசி மாத மகத்துவங்கள் !!
மாசி என்பது மகத்தான மாதம். வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், உபநயனம் முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி மாதம். இந்த மாசி மாதத்தில் நாம் எது செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு என்பது உறுதி. மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதை பற்றி காண்போம்.
இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம் போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜயா ஏகாதசி
மாசி மாதத்தில் வரும் வளர்பிறை (சுக்லபட்சம்) ஏகாதசி ஜயா ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி தினத்தன்று இந்திரனின் சாபத்தின் காரணமாக பேய்களாக திரிந்த புஷ்பவந்தி, மால்யவன் ஆகிய கந்தவர்கள் தங்களையும் அறியாமல் இரவு விழிந்திருந்து இறைவனை வழிபட்டு மீண்டும் கந்தவர்களாயினர். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை முறியடிப்பதற்கும் இந்த ஏகாதசி விரதம் துணை செய்யும்.
ஆகையால் இந்த ஏகாதசி விரதத்தினை அனைவரும் பின்பற்றி இறையருள் மூலம் நற்கதியினைப் பெறலாம்.
மாசிப்பௌர்ணமி அன்றுதான் அன்னை உமையவள் காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவபக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசிப்பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசிப்பௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசிப்பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.
மாசி மகம்
இவ்விழா மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது. அன்று தானம், தவம் முதலியவற்றோடு புனித நீர்நிலைகளில் நீராடுவதும் பெரும் புண்ணியங்களைத் தரவல்லது. கோவில்களில் வழிபாடு செய்து அன்னதானம் முதலியனவும் செய்ய வேண்டும். இந்நாளில் செய்யும் வழிபாடும், தரிசனமும் மிகவும் உயர்ந்த பயனைத் தரவல்லதாகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.
மாசி சங்கடஹர சதுர்த்தி
மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம். சங்கடஹர விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைப்பிடித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெறலாம்.
மஞ்சுளாயுகேஷ்
Comments