விடுதலை பெற்ற இயற்கை.
விடுதலை காணும் இயற்கை.
.. உலகே உறங்கிக் கிடக்கிறது ஊர்கள் முடங்கி விட்டன. எதுவும் இயங்கவில்லை. மனிதர்கள் பார்வையில் இதுதான் இன்றைய நிலைமை..!
அதனதன் போக்கில் செயல்படும் இயற்கையைக் கொண்டு உண்மையை உணர்வோம்...!
காலைக் கதிரவன் கண்களைத் திறக்க காலை விடிகிறது பூக்கள் சிரிக்கின்றன. பனித்துளிகள் மறைகின்றன. பறவைகள் பாடி மகிழ்கின்றன. ஆறுகள் எத்துணை அமைதியாய் தெளிந்த நிலையில் சல சலவென ஓடி வருகின்றன. காட்டு விலங்குகள் களிப்புடன் நடமாடுகின்றன. காட்டு மரங்கள் வேகமாய் வளர்கின்றன. மலைகளின் பச்சைக் கம்பளம் மாசின்றிக் கிடக்கிறது. வானம் வெளுத்து தூய்மையாய் தெரிகிறது. மேகக் கூட்டங்களில் சேர்ந்த நீர்த்துளிகள் மழையாய் பொழிகிறது. கடலின் அலைகள் கரையதை தொடுவதில் காதல் கொள்கிறது. ஆழக்கடலும் அதிலுள்ள உயிர்களும் அமைதியாய் பேசிக் கொள்கின்றன.
வளியினில் மாசின் அடர்த்தி குறைந்து தூயவளி சுழல்கிறது. இயற்கைக்கு இந்த நாட்கள் சுந்திர தினம். இறைவன் மனிதனின் கையில் உலகைக் கொடுத்தது அழித்திடவல்ல. படைப்பை பாதுகாத்து விருத்தி செய்யிதிடவே. மனிதன் அழித்தான் உவகை அடைந்தான் வீடுகள் கட்டிடங்கள் வீதிகள் விவசாய நிலங்களென்று விண்வெளி வரையிலும் ஆக்கிரமிப்புகள். ஆணவம் வேறு! விஞ்ஞானம் வளர்ந்தது விந்தைகள் நிறைந்தது. படைத்தவனை மறந்தான். மனம் போன போக்கில் வாழ்ந்தான். உலகை அழிக்கும் உபாயங்கள் தேடினான். கொன்றான் குவித்தான். உணவில் கலப்படம் செய்தான். அணுகுண்டை கொண்டு அச்சுறுத்தினான்.
இறைவனின் பார்வையில் எதுவும் சரியில்லை. அவன் எதிர் பார்த்த உலகம் இதுவல்ல. மனிதனுக்கு தக்க பாடம்புகட்டி உலகைக் காக்க நினைத்தான். உலகில் வாழும் எல்லா மனிதருக்கும் ஓய்வைக் கொடுத்தான். உலகில் இதுவரை மனிதர்கள் எப்போதும் ஓய்ந்திருந்ததில்லை. இதுவே முதல் முறை. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர் கொண்டு கருத்தாய் செயல்கள் நடக்கிறது
. மனிதம் மரண பீதியில் உலகம் மயாணமாய் மாறின. பழையன கழிதலும் புதியன புகுதலும் மறைந்து போக புதிய வானகமும் புதிய வையகமும். காட்சி தரப்போகிறது. இதனைக் காண்பதற்கு யார் இருப்பர்கள் என்பது அவனே அறிவான். இப்பொழுது நடைபெறும் துன்பம் முடிவுறும் போது நாம் நம்மில் பலரை இழந்திருப்போம். ஏன் நாம் கூட இல்லாதிருக்கலாம்.
ஆனால் இயற்கைக்கு அழிவில்லை அது இன்னும் அழகாய் அமைந்திருக்கும். அப்பொழுதே எஞ்சியோர் உணர்வர் இறைவனின் செயல்களையும் இயற்கையின் அவசியத்தையும். இது அருளின் காலம் மனந்திரும்புதலின் காலம் மன்னிப்பின் காலம். தன் குற்றமுணர்ந்து மீண்டு வாழ இறைவனின் இறுதி வாய்ப்பு இது என்பதே சித்தம்.
---மஞ்சுளாயுகேஷ்
Comments