அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை.. .
அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை..
.
யானைச் சிற்பம்
துரவுமேல் அழகராகிய சித்தருக்குப் பாதுகாப்பாக விளங்கும் யானையின் சிற்பம் ஒன்று கோயிலின் எதிர்ப்புற வளாகத்தில், ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சுடுமண்/சுதைச் சிற்பமாகலாம். பழமையான சிற்பம்தான். காலக்கணிப்புக்குச் சான்றில்லை. இந்த யானையும், கோவில் வளாகத்தினுள் உள்ள குதிரையும் இரவில் வேட்டைக்குப் போய்த்திரும்புவதாக நம்பிக்கை. யானைக்கு உதவியாக ஒரு நாயும் உண்டு. ஒருமுறை, பலாக்காயைத் திருடவந்த கள்வனை நாய் குரைத்து இருப்பைக் காட்ட, யானை தன் துதிக்கைகொண்டு கள்வனை வளைத்துப்பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியை அழகுறக்காட்டும் சிற்பத்தொகுதி நாட்டார் கலை வண்ணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. யானையின் கழுத்தைச் சங்கிலியும், சிறு சலங்கை மணி கோர்த்த கயிறும், சற்றுப் பெரிய மணிகள் கோர்த்த கயிறும் அணி செய்கின்றன. யானையின் முதுகில் (பட்டுத்?) துணி போர்த்தப்பெற்று, உடலின் இருமருங்கிலும் பெரிய மணிகள் (சங்கிலியால் இணைத்தவை) தொங்குகின்றன. மணிகளின் கீழ் இசைக்கருவிகளை இசைத்த நிலையில் பக்கத்துக்கு மூன்றாக ஆறு பூதகணங்கள் அல்லது மனித உருவங்கள் காணப்படுகின்றன. யானையின் இடது கால் கள்வனின் காலை மிதித்துப் பிடித்துத் துதிக்கையால் வளைத்து நெருக்குகிறது. கள்வனின் காலருகில் நாயும் பலாக்காயும்காணப்படுகின்றன.
தகவல் :மஞ்சுளாயுகேஷ்
Comments