நூலும் திரையும் - 3
நூலும் திரையும் - 3
இப்போது, படம் அது பற்றி பூமணியின் குறை போன்றவற்றுக்கு வருவோம்.
நாவல் என்பது ஒரு வடிவம்.
திரைக்கதை இன்னொரு வடிவம்.
படக்கதையும் ஒரு கலை(இலக்கிய)ப் படைப்பே.
இதை, முதல்நூல் - வழிநூல் - சார்புநூல் என்பது போன்றதொரு உறவுடையதாகப் பார்க்கலாம்.
நாவலை மாற்றாமல் படமாக்கியிருந்தால், நல்ல படம் கிடைத்திருக்லாம். நல்ல வசூல் கிடைக்காது. ஹீரோவுக்கு ஏற்ப கதை எழுதுகிற இக்காலத்தில்,
இது கதையில் ஹீரோவுக்கேற்ற மாற்றங்கள் செய்த முயற்சி.
பூமணி அவரே படமெடுத்திருந்தால், அவர் விரும்புகிற உன்னத கலைப்படம் நமக்குக் கிடைத்திருக்கும்.
அண்மையில், இயக்குனர் வசந்தபாலன், தான் 'வெக்கை'யைப் படமாக்க எண்ணியிருந்ததாகவும், வெற்றிமாறன் முந்திக்கொண்டதாகவும் சொல்லியிருந்தார்.
ஒருவேளை அவர் பூமணியின் படைப்புக்கு நெருக்கமாக வந்திருப்பாரோ என்னவோ...
என்ன பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன:
1. கதையில், சிதம்பரத்தின் அப்பா பெயர் பரமசிவம். படத்தில் சிவசாமி. அது பெரிதில்லை.
அவர் பிறந்த ஊரில் அவருடைய நிலம் தொடர்பாக தகராறு எழுந்து, ஒரு கொலை செய்துவிடுகிறார். சிறை வாசத்துக்குப் பின் இந்த ஊருக்கு வந்து இங்கே முழுக்காலமும் வாழ்கிறார். இந்தச் சின்ன குறிப்புதான் கதையில் உள்ளது.
அதுவும், காட்டில் பையனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, சிறை அனுபவத்தைச் சொல்கையில், நினைவுகூர்கிறார். ஏன் எப்படி என்ற விவரமெல்லாம் கிடையாது.
சொல்லப்படாத அவருடைய இளமைக்காலத்தை தனுஷுக்கேற்ப வெற்றிமாறன் எழுதிக் கொள்கிறார்.
இதில் நான் தவறு காணவில்லை.
கதையில் இருக்கிற ஒளிமறைவுப் பகுதியில் இயக்குனர் தன் தேவையையொட்டி வெளிச்சம் பாய்ச்சிக்கொள்கிறார்.
இதில் நிரம்ப வணிக அம்சங்கள் நுழைக்கப்பட்டு படத்தின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும்.
வால்மீகியைத் தமிழுக்கேற்ப மாற்றிக் கம்பர், இராமவதாரம் படைத்தார்.
மகாபாரதத்தில் சிறு மாற்றம் செய்துதான் பாஞ்சாலி சபதம் அமைந்தது.
"தம்பீ ! எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் -அண்ணன்
கையை எரித்திடுவோம்"
என்று வீமன் கொக்கரிப்பது மகாபாரதம் சொல்லாதது.
இன்னொன்று.
எம் டி வாசுதேவன் நாயர் எழுதிய புகழ்பெற்ற 'இரண்டாமிடம்' நாவலில் வீமன்,
தான் unsung ஆகப் புற்கணிக்கப்பட்டு, பலவீனமான தருமனும் தனக்கு இளையவனான அர்ச்சுனனும் புகழடைந்து, துரியோதனன் உட்பட நூறு கௌரவர்களைக் கொன்ற தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாமற் போயிற்றே என்று அங்கலாய்க்கிறானே, இது வியாசரில் இல்லையே என்ன செய்வது.
பூமணியே மகாபாரதக் கதையை எழுதினார், 'கொம்மை'யாக.
அவர் எத்தனை மாற்றங்கள் செய்துள்ளார்.
எல்லாம் பரிமாணங்கள், புதுப்புது வடிவங்கள்.
2. சில பாத்திரங்களை முழுவதுமாகக் கைவிட்டு, சில புதிய மாந்தர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முக்கிமாக கொள்ளைப் பாசமும் நிரம்ப வெகுளித்தனமும் கொண்ட அத்தை, படத்தில் இல்லை.
திரைக்கதையின் வெளி என்ன கோருகிறதோ அதைச் செய்துள்ளனர் என்று சமாதானம் அடைகிறோம்.
3. நாவலில் அச்சிறுவன் சிதம்பரம் சொல்வது போல் அவன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.
படம் அப்படியில்லை. அவனுடைய அய்யாவின் வாழ்க்கையாக, அவருடைய கோணம் மேலோங்கியுள்ளது.
இது நாவலுக்கும் திரைப்படத்துக்கும் இடையிலான பெரிய வித்தியாசம்.
அய்யா ஆளுமையானவராகவும் மகனை second fiddle ஆகவும் அமைத்துவிட்டார்கள்.
ஆனால், கதையில் இருவருமே வலிமையான பாத்திரங்கள். சிதம்பரம் ரெம்ப சூதானமானவன்.
4. கொஞ்ச நேரமே வந்தாலும், நாவலில் சொல்லப்பட்ட அண்ணனை அப்படியே படத்தில் காண்கிறோம்.
5. கரிசல் மொழி மாற்றப்பட்டுள்ளது.
ஆம். பூமணியின் இக்கவலை நியாயமானது.
பார்வையாளர்களுக்குப் பரிச்சயமான மொழி நெல்லைத் தமிழ், பரவலாகச் சேரும் என்று எளிமையான வழியைக் கையாண்டுள்ளனர் போலும்.
ஆனால், கரிசல் நிலவெளியில் அவர்கள் வழங்கும் மொழி இன்றி, வேற்று dialect பேசுவது தட்டையாக அந்நியமாக இருந்தது.
6. கரிசல் நிலப்பரப்பை நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிதம்பரம் கொலை செய்துவிட்டு, காடு மலை ஏறுகிற காட்சி என் கற்பனையை ஒட்டியே படமாக்கப்பட்டிருந்தது.
என்னால் ஒன்றமுடிந்தது.
7. நாவலில், அந்த ஒருவாரத்தில், அவனையும்
தினந்தோறும் வந்து போகிற அவன் அய்யாவையும்
ஒருமுறை வந்த மாமாவையும் தவிர வேறு யாரும் வரவில்லை.
ஆனால், படத்தில் வடக்கூரானின் ஆட்கள் வேவு பார்த்து வந்து வளைத்துக்கொள்வதாகவும், அய்யா அவர்களோடு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டு விரட்டுவதாகவும் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இது தனுஷின் ரசிகர்களுக்காகச் சேர்க்கப்பட்டுத் தனியே துருத்தலாகத் தெரிந்தது.
8. எந்த இடத்திலும், சிறிதும் நாவலில் பேசப்படாத 'தலித்தியம்' 'சாதியம்' 'பஞ்சமி' விஷயங்களைப் படம் பேசுகிறது.
இதைப் படக்குழு தவிர்த்திருக்கவேண்டும்.
கதையின் உயிர்நாடியைப் படம் சிதைக்கிறது.
அந்த விஷயங்கள் சரியானவை, பேசப்படவேண்டியவையே.
ஆனால், இக்கதையில் அல்ல.
இன்றைய trend, விலையாகக் கூடிய பேசுபொருள், என்பதால் வலிந்து சேர்த்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
பூமணியின் கதை பாதி, வெற்றிமாறன் கதை மீதி என்று இரண்டையும் ஒட்டுப்போட்டு
வெற்றிப்படமாக ஆக்கியிருக்கிறார்கள்.
வெற்றிமாறன் சேர்த்த பின்பாதியைப் பற்றி இங்கு எதுவும் சொல்லாமல் தவிர்க்கிறேன்.
காரணம், அது நாவல் அல்ல.
மொத்தத்தில், we can empathise with Poomani, for reasons said above.
(அடுத்து ஹார்ப்பர் லீ )
--- வெ.பெருமாள்சாமி
Comments