பாரதீய ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி
நாக்பூரில் அண்மையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசால் மராட்டியத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றமும் கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற ஒரு சம்பவம் கூட மீண்டும் நிகழக்கூடாது.
எங்களை குறி வைத்து தாக்குவதற்கு முன் பாரதீய ஜனதா, அது ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
குறிப்பாக போலீசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
நான் அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கப் போகிறேன். எத்தனையோ நாட்கள் கடந்த போதிலும், இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
நியாயப்படுத்தப்படாத காரணங்களால் எங்களை குறிவைப்பவர்கள் முதலில் அவர்களது கண்காணிப்பின் கீழ் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பின்னர் எங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments