76வயதிலும் வாசிப்பு
சேரன்மகாதேவியைச் சேர்ந்த 76 வயது மூதாட்டியான கணபதி அம்மாள், புத்தகக் கண்காட்சியில் ஒவ்வோர் அரங்கமாகச் சென்று ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்து ஓரமாக நின்றபடியே வாசித்துக்கொண்டிருந்தார்.
நெல்லையில் நான்காவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதி வரை நடக்கும் இந்தப் புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகின்றனர். தினந்தோறும் சிறப்புப் பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் அழைத்து வரப்பட்டு வாசிப்பின் அவசியத்தைப் புரியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நடக்கும் வ.உ.சி மைதானத்தில், உலக சாதனைக்கான தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 1-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் புத்தக வாசிப்பில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
புத்தகத் திருவிழாவில் இரவு பகலாக நடக்கும் இந்தத் தொடர் வாசிப்பு நிகழ்ச்சியை சிறப்புச் செய்யும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கலந்துகொண்டு புத்தகம் படித்தார். ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரையும் சாதனைக்கான தொடர் புத்தக வாசிப்பில் தன் பங்களிப்பு இருக்கும் வகையில் புத்தகம் படித்தார்.
நெல்லை புத்தகத் திருவிழாவை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், கணபதி அம்மாள் என்ற 76 வயது மூதாட்டி புத்தகம் வாசிக்கும் புகைப்படம் வைரலானது. வயதானபோதிலும், சேரன்மகாதேவியில் இருந்து புத்தகத் திருவிழாவுக்கு ஆர்வத்துடன் அவர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அந்த மூதாட்டியை மேடையேற்றி கௌரவித்தார்.
இது குறித்து கணபதி அம்மாள் கூறுகையில், ``சிறு வயதில் இருந்தே நாளிதழ்கள், வார இதழ்களை ஆர்வத்துடன் படிப்பேன். நான் வசிக்கும் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பதால் கையில் கிடைக்கும் பழைய புத்தகங்களைக்கூட விரும்பிப் படிப்பேன்.
இரு தினங்களுக்கு முன்பு பேப்பர் படித்தபோது, நெல்லையில் புத்தகத் திருவிழா நடப்பதை அறிந்தேன். அதனால் பஸ் ஏறி நெல்லை வந்துவிட்டேன். பேருந்து நிலையத்தில் இறங்கியதும் புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தை அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். பிறகு அங்கிருந்து நடந்தே வந்தேன். மீண்டும் திரும்பிச் செல்ல டிக்கெட்டுக்கான பணம் 20 ரூபாய் மட்டுமே வைத்திருந்தேன்.
அதனால் ஒவ்வொரு ஸ்டாலாகச் சென்று, முக்கியமான புத்தகங்களை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர், `பாட்டி உங்களுக்குப் புத்தகங்களைப் படிக்கப் பிடிக்குமா?’ என்று கேட்டார். நான் `ஆம்’ என்று சொன்னேன். அவர் என்னை சில புகைப்படங்கள் எடுத்தார்.
அவர் என்னிடம், `நீங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கிக்குங்க. நான் பணம் குடுத்துடுறேன்’ என்றார். நான் அவரிடம், `வேண்டாம்... இன்று பணம் கொண்டுவரவில்லை. நாளை மீண்டும் வந்து புத்தகம் வாங்கிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்.
இந்த நிலையில், வீட்டுக்குத் திடீரென என்னைத் தேடி வந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். இங்கே வந்ததும் என்னை மேடையில் ஏற்றி பொன்னாடை போட்டதுடன் நிறைய புத்தகங்களையும் பரிசாகக் கொடுத்துவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றதும் வாசிக்க நிறைய புத்தகங்கள் கிடைச்சிருக்கு’’ என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி குழந்தையாகச் சிரித்தார் கணபதி பாட்டி.
Comments