நூலும் திரையும் -பகுதி 1

 


நூலும் திரையும் -1


 


      இரண்டு மூன்று திங்கள்களுக்கு முன்,  நான் படித்துக்கொண்டிருந்த To Kill A Mocking Bird நாவலில் இருந்து ஒரு மிகச்சிறு பகுதியை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர்  அந்நாவலைத் தான் படித்துள்ளதாகவும், அது கிரிகோரி பெக் நடித்து திரைப்படமாகவும் வந்து அதையும் பார்த்துள்ளதாகவும், இரண்டுமே அருமை என்றும் தெரிவித்தார்.


 


வெறுமனே புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று தொடங்கியிருந்த எனக்கு, அவர்  சிலாகித்த அப்படத்தையும் பார்க்க ஆவலாயிற்று.


 


எனவே, நாவலை வாசித்து முடித்து, அடுத்து திரைப்படத்தையும் பார்த்தேன்.


 


இன்னொரு புறம், எனது நண்பர் பூமணியின் 'வெக்கை' நாவல்.


அவருடைய இரண்டாவது நாவல் அது.  1982'ல் வெளியாயிற்று.


அப்போதே சுடச்சுடப் படித்தேன். அதன் விறுவிறுப்பு படமாக்குவதற்கு ஏற்றது என்று நண்பரிடமும் சொன்னேன்.


ஆனால், அவரோ தன் முதல் நெடுங்கதை 'பிறகு'வைப் படமெடுப்பதற்கு முனைந்து முயன்றார்.


தற்போது, அந்த 'வெக்கை'தான், 'அசுரன்' திரை அவதாரம் எடுத்து வெற்றி ஊர்வலம் வந்து முடித்துள்ளது.


 


அது படமாக வர இருந்தது என்பதால் நாவலை மறுபடியும் படித்து,


தொடர்ந்து படத்தையும் பார்த்தேன்.



எப்போதும், வாசிக்கிற நிறைவு விஸ்தாரத்தைப், படம் பார்க்கிற அனுபவம் தருவதில்லை.


தனியாகப் படம் பார்த்து நிறை குறைகளை ரசிக்கலாம், தொழில் நுட்பச் சிறப்புகளில், நடிப்புத் திறமைகளில், படமாக்கிய நேர்த்தியில் திளைக்கலாம்.


அது வேறு.


ஆனால், ஒரு கதையை முதலில் படித்துவிட்டு,


அடுத்து அதைப் படமாகப் பார்க்கும் போது


ஒரு குறை ஒரு போதாமை


ஒரு இடைவெளி ஒரு ஏமாற்றம் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது.


 


ஒன்றைப் படிக்கும் போது, கூடவே அதை நாம் மனக் கண்ணில் விஷுவலைஸ் பண்ணுகிறோம்.


 


அக்காட்சி நம் கற்பனையில் ஒரு தீவிரத்துடன் ஒரு அழகியலோடு ஒரு வடிவமைப்புடன் விரிகிறது.


 


ஆனால், அந்த அளவுக்குப் படத்தில் அமையாத நிலையில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.


 


இப்படி வேண்டுமானால் சொல்லலாம்.


மிதிலை நகர் வீதியில் நின்று, இராமன் மாடத்தில்லுள்ள சீதையையும், அங்கிருந்து பிராட்டி இராமனையும் பார்த்ததைக் கம்பர்,


'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'


என்று பாடியதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்காட்சி காணக் கிடைக்கும்.


ஆனால் படம் பார்த்தால் ஒரே காட்சியையே ஒரே அனுபவத்தையே அனைவரும் பெறுவோம்.


 


நம் கற்பனைக்கெல்லாம் எட்டாத திறனுடன் காட்சிகளை அமைக்கிற,


நமக்குப் பிரமிப்பூட்டுகிற திரைப்படைப்பாளிகள் அரிதானவர்கள்.


 


அவர்கள் என் பொதுப் பார்வைக்கு விலக்கானவர்கள்.


அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


 


இனி, இந்த இரண்டு புதினங்கள் இரண்டு திரைப்படங்கள்.


ஏழு பகுதிகளாக, அடுத்தடுத்துப் பார்ப்போம்.


(தொடரும்)


  --வெ.பெருமாள்சாமி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி