தேர்வில் முறைகேடுகள்
குரூப்-4 முறைகேடு புகாரில் 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்ததோடு அவர்களுக்கு வாழ்நாள் தடை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
அதில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது, தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதற்கிடையே தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான 39 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 39 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments