தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகும்
மின்திட்டங்களுக்கான நிதியுதவியை
மத்திய அரசு நிறுத்தக் கூடாது!
#மருத்துவர் ராமதாஸ்
--அறிக்கை---
தமிழ்நாடு மின்சார வாரியம் மீளமுடியாத கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதன் மூலம் செயல்படுத்தப்படும் மின்திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை நிறுத்தப் போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசின் புதிய நிலைப்பாடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து விளக்கியிருக்கிறார். தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் ஏராளமான தொகையை நிலுவை வைத்திருப்பதாகவும், தமிழக அரசுத்துறைகள் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளன என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், அடுத்த 3 மாதங்களில் இக்குறைகள் களையப்படாவிட்டால் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தும் மின்திட்டங்களுக்கு மத்திய அரசின் மின்நிதி நிறுவனங்கள் வழங்கி வரும் கடன் உதவி நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மின்திட்டங்கள் அனைத்திற்கும் ஊரக மின்மயமாக்கல் கழகம் (Rural Electrification Corporation Limited), எரிசக்தி நிதி நிறுவனம் (Power Finance Corporation) ஆகிய நிறுவனங்கள் தான் கடன் வழங்கி வருகின்றன. பொதுத்துறை வங்கிகளை விட மின் நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால், அதற்காக பல நிபந்தனைகளையும் விதிக்கின்றன. மின்வாரியங்கள் லாபத்தில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் விதிக்கப்படும் நிபந்தனைகளில், மின்சாரக் கொள்முதலுக்கான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும்; வினியோகிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணம், மானியம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்பன மிகவும் முக்கியமானவை.
ஆனால், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்த மின்சாரத்திற்காக மின் வாரியம் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தாமல் வைத்திருக்கும் நிலுவை ரூ.11,728 கோடி ஆகும். அதேநேரத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மின்வாரியத்திற்கு ரூ.1500 கோடிக்கும் கூடுதலான தொகையை நிலுவை வைத்துள்ளன. இவற்றையெல்லாம் காட்டி தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்திட்டங்களுக்கு கடனுதவி வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
மின்சார வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு தெரிவித்திருக்கும் விவரங்கள் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இதன் பின்னணியை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை நேற்றைய நிலவரப்படி 13,215 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தும் மின் திட்டங்களின் திறன் 7158 மெகாவாட் என்றாலும், அவற்றின் மூலம் நேற்று உற்பத்தி செய்யப்பட்டது வெறும் 2974 மெகாவாட் மட்டும் தான். மீதமுள்ள தேவையில் 4881 மெகாவாட் மத்திய மின் திட்டங்கள் மூலமாகவும், 5360 மெகாவாட் மின்சாரம் தனியார் மின்திட்டங்களில் இருந்தும் வாங்கப்படுகிறது.
தனியாரிடமிருந்து அதிகவிலைக்கு வாங்கப்படும் மின்சாரத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது, உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போன்ற சமூக நலத் திட்டங்களால், மாநில அரசின் மானியத்தை பெற்ற பிறகும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.8000 கோடி இழப்பை சந்தித்து வருகிறது. 2007-13 காலத்தில் தமிழகத்தில் மிகக்கடுமையான மின்தட்டுப்பாடு நிலவியது. அந்த காலத்தில் மிக அதிக அளவிலான மின்சாரம் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டது தான் இந்த இழப்புக்கு காரணமாகும். 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு மின்சார வாரியத்தின் இழப்பு குறைந்து வந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்தக் கடன் கடந்த 2018-ஆம் நிதியாண்டின் முடிவில் ஒரு லட்சத்து 1,294 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. அதனால் தான் தமிழ்நாடு மின்வாரியத்தால் மின்கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை.
தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்துவதன் மூலம் தான் இழப்பை தவிர்க்க முடியும். அதற்கு அதிக எண்ணிக்கையில் மின்திட்டங்களை செயல்படுத்தினால் மட்டும் தான் இது சாத்தியமாகும். இன்றைய நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் 5700 மெகாவாட் மின்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் 12,000 மெகாவாட் திறனுள்ள மின்திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. இவற்றையெல்லாம் விரைந்து செயல்படுத்தினால் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும். அதற்கு மத்திய மின் நிதி நிறுவனங்களின் உதவி தேவை. மத்திய மின்நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்தி விட்டால், மின்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு சென்று விடும். அதன்பின் நிலைமையை சீரமைக்க இலவச மின்சாரத்தை நிறுத்துவது, மானியத்தை ரத்து செய்வது, கட்டணத்தை உயர்த்துவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இது மக்கள் நலனுக்கு ஏற்றதல்ல.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, தமிழக மின்திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தும் முடிவை கைவிடுவதுடன், மின்சார வாரிய நிதிநிலையை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
Comments