வயநாட்டில் ராகுல் காந்தி பேரணி
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தொடர்ச்சியான போராட்டங்களில் அந்த கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதைப்போல கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக அவர் இந்த சட்டத்துக்கு எதிராக நேற்று வயநாட்டில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்.
‘அரசியல் சாசனத்தை காப்போம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பேரணியானது வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக்கொடியுடன் கலந்து கொண்டனர்.
கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர்.
இந்த பேரணி முடிவில் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியர்கள் அனைவரும் தற்போது தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருப்பது ஒரு மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழல் ஆகும். மக்களின் குடியுரிமையை கேட்க உங்களுக்கு (மோடி) அதிகாரம் கொடுத்தது யார்? 130 கோடி மக்களும் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கு எந்த தேவையும் இல்லை.
பிரதமர் மோடியும், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்கள். ஆனால் மோடியோ தனது கொள்கைகளை வெளிப்படுத்தவில்லை.
தனது நண்பர்களை பாதுகாப்பதில் மட்டுமே பிரதமர் ஆர்வம் காட்டுகிறார். நாட்டின் அனைத்து துறைமுகங்களும் அதானிக்கு விற்கப்பட்டு உள்ளன. தனியார்மயம் என்ற பெயரில் இன்னும் ஏராளமான நிறுவனங்கள் விற்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்போவது இல்லை.
Comments