ரஜனி பிறந்தநாள் விழா
திரைப் பிரபலங்கள் புகழாரம்
``2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள். அதற்கு முன்பு தொண்டர்களாக மாறுங்கள்'' என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் திரைப் பிரபலங்கள் பேசினர்.
ரஜினியின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள இண்டோர் அரங்கில் `எளிமை மனிதரின் எழுபதாவது பிறந்தநாள் விழா' என்ற தலைப்பில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் கலந்துகொண்டனர். ரூ.6 லட்சம் மதிப்பில் 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய பிரபலங்கள், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் தொண்டர்களாக மாறுமாறு ரசிகர்கள் முன்னிலையில் பேசினர்.
பாரதி ராஜா பேசுகையில், ``ரஜினி என் உயிர் மூச்சுக்கும் மேலானவர். சூப்பர் ஸ்டாருக்காக வரவில்லை. சூப்பர் மனிதருக்காக இங்கு வந்திருக்கிறேன். இதுநாள்வரை அடுத்தவர் இதயத்தைக் காயப்படுத்தாத ஓர் இதயம் என்றால் அது ரஜினி மட்டுமே. சபரிமலை கோயில், திருப்பதி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எல்லாம் தனித் தனிச் சிறப்புகள் உள்ளன. அது மாதிரி, ரஜினியைப்போல் யாரும் இருக்க முடியாது.
எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். நான் `16 வயதினிலே' படம் பண்ணும்போது, ரஜினியின் பரட்டைத் தலையைப் பார்த்து அவரிடம் பரட்டை கேரக்டரில் நடிக்க வேண்டுமென்று கூறினேன். அதற்கு அவர் ரூ.5,000 சம்பளமாகக் கேட்டார். அதற்கு, அவ்வளவு தொகை முடியாது என்றேன். பிறகு, ரூ.3,000 சம்பளம் பேசி முடிக்கப்பட்டது. அவர் நடித்து முடித்த பிறகு ரூ.2,500 கொடுத்தேன். இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி இருக்கிறது.
எனக்கும் ரஜினிக்கும் இரண்டு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கூட என் மீது ரஜினிக்கு கோபம் வரவில்லை. `குரு சிஷ்யன்' படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை என்னைப் பார்க்குமாறு ரஜினி சொன்னார். நானும் படம் பார்த்துவிட்டு வெளிவந்தேன். `அண்ணே படம் எப்படி இருக்கிறது?' என்று கேட்டார். `இதெல்லாம் ஒரு படமா?' என்று கூறினேன். அதற்கு அவர், `நிச்சயம் இந்தப் படம் வெற்றிபெறும்' என்றார். எப்படி என்று கேட்டதற்கு, `நீங்கள் ரசிக்கவில்லை என்றால், படம் நிச்சயம் வெற்றிபெறும்' என்றார். அந்த அளவுக்கு நல்ல மனிதர், எளிமையானவர்.''
திரைப்பட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், ``அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் திரைத் திரையுலகில் வரலாறு படைத்தவர்கள். அப்படிப்பட்ட வரலாற்றில் இடம் பெற்றவர் சூப்பர் ஸ்டார். அவர்களின் மரபுவழி வந்தவராக ரஜினியைப் பார்க்கிறேன். அவர் நல்ல மனிதர் என்பதால்தான் பாரதப் பிரதமரே வீட்டுக்கு வந்து பார்த்தார். ரஜினியின் கருத்துக்குத் தடை யார்? அகவையில் மிக மிக இளையவர்; இவர்தான் தமிழ்நாட்டுக்கு துணையானவர்; ரஜினி வென்று காட்டுவார்; உயர்ந்து நின்று காட்டுவார்'' என்று புகழாரம் சூட்டினார்.
Comments