இணைந்த ராஜாக்கள்
.. இணைந்த இளையராஜா, பாரதிராஜா
பாரதிராஜா, இளையராஜா இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். சினிமாவில் நுழைந்த பின் இவர்கள் இணைந்த படங்கள்அனைத்தும் வெற்றிப் படங்களாகவும், பாடல்கள் இன்றைக்கும் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன.
2013ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா மேடையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதால் இருவரும் பிரிந்தார்கள். இளையராஜாவும் பாரதிராஜா பேச்சு பற்றி வருத்தப்பட்டுப் பேசினார். அதன் பின் இருவரும் சந்தித்துக் கொண்டதேயில்லை
. சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜா சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா களத்தில் இறங்கி இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதை அனைவரும வரவேற்றார்கள்
இந்த தருணத்தில் இன்று(நவ., 1) தேனி, வைகை அணையில் திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு, “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது.... இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி ஒரு பிரம்மாண்ட இசை விழா நடைபெற உள்ளது. அதில் இருவரும் ஒன்றாக மேடையில் கலந்து கொள்ள உள்ளார்கள் எனவும் அறியப்படுகிறது
. அதன் முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது எனலாம். பாடல் காப்பிரைட் விவகாரத்தில் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் மோதிக் கொண்டு பிரிந்திருந்து சமீபத்தில் இசைக் கலைஞர்கள் சங்க விழாவுக்காக அவர்கள் இணைந்து இசை ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இப்போது பாரதிராஜா, இளையராஜா மீண்டும் இணைந்திருப்பது குறித்து அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்
Comments