யாதுமாகி நின்றாய் காளி

யாதுமாகி நின்றாய் காளி



    தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டும் சிறப்பானதொரு ஆட்சியை பரிபாலனம் செய்து மாவீரனாகத் திகழ்ந்தவர் மராட்டிய மன்னர் “சத்ரபதி சிவாஜி”.தென்னிந்தியா வரையில் தன் ஆட்சியை விரிவுபடுத்திய இம்மன்னர் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திக்விஜயம் செய்தபோது 1667-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் நாள் வருகை தந்து வணங்கி ஏராளமான வரங்களைப் பெற்று மகிழ்ந்த சிறப்புக்குரிய ஆலயம் சென்னையின் மையப்பகுதியான மண்ணடியில் அமைந்துள்ள ஶ்ரீகாளிகாம்பாள் சமேத ஶ்ரீகமடேஸ்வரா் திருத்தலம்.


   சென்னைநகரம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் ஆங்கிலேயரால் அரசாளப்பட்ட போது புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளிருந்த இந்த ஆலயம் அன்னியர்களான அவர்களின் அச்சுறுத்தலினால் தற்போது கோயில் கொண்டுள்ள தம்பு செட்டித் தெருவிற்கு   இடமாற்றம் செய்யப்பட்டது.


   தன் உணர்ச்சி ததும்பும் பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை காட்டுத் தீயாய் பரவச் செய்த பாட்டுக்கொரு புலவன் பாரதி அன்னை காளிகாம்பாளின் மீது கொண்ட அளவற்ற பக்தியால்,”யாதுமாகி நின்றாய்-காளி,எங்கும் நீ நிறைந்தாய்”என்று பரவசத்துடன் பாடித் துதித்துள்ளார். புராதன காலத்தில் “பரதபுரி”என்றும் “சொர்ணபுரி” என்றும் பக்தியோடு பூஜிக்கப் பட்டு உள்ளது இத்தலம்.


   அக்காலத்தில் மீனவ மக்கள் தங்கள் தொழில் நிமித்தம் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் அன்னைக்கு செந்தூரத் திலகமிட்டு வழிபாடு செய்து அத்திலகத்தைத் தங்கள் நெற்றியிலும் இட்டு வழிபாடுசெய்த பின்னரே கடல் பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை இத்திருக்கோயில் குறித்த வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது. இதனால் அன்னை காளிகாம்பாள் “நெய்தல் நில காமாட்சி”என்ற திருநாமத்துடனும் பூஜிக்கப்படுகின்றாள்.காஞ்சி அன்னை காமாட்சியின் கருவறையில் ஶ்ரீசக்ரம் உள்ளது போல ஶ்ரீகாளிகாம்பாளின் திருப்பாதங்களுக்கு முன் கருவறையில் “அர்த்தமேரு சக்ரம்” பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காஞ்சி மஹாபெரியவர் இத்தலத்தில் வழிபாடு செய்து அன்னையின்    அளவிட முடியாத அருள்கண்டு பரவசமடைந்துள்ளார்.


   மேற்கு நோக்கிய கருவறையில் பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் அன்னையின் திருமுக மண்டல தரிசனத்தில் மெய்சிலிர்த்து தம் நிலை மறந்து விடுகின்றனர் பக்தர்கள். வலது திருக்கரத்தில் பாச அங்குசமும் நீலோத்பவ மலரும் இடது கரத்தில் வரத முத்திரையுடனும் வலது திருப்பாதம் தரையில் ஊன்றியவாறும் கோடி சூரியப் பிரகாசமாக காட்சியளிக்கும் அன்னையின் எழிற்கோலத்தை வார்த்தைகளுக்குள் சிக்கவைக்க இயலவில்லை.இவ்வுலகிலுள்ள உவமைகள் அனைத்துமே அன்னையின் உன்னத படைப்பு என்பதால் உவமைகளுக்கு எட்டாத செளந்தர்ய நாயகியாகத் திகழ்கிறாள் அன்னை.


தன் செல்வம் என்றும் நிலைபெற்றிருக்க நவநிதிகளின் தலைவனான குபேரன் இத்தலத்தில் வழிபாடு செய்து பலன் பெற்றுள்ளார் என்றும் இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கின்றது.நீங்காத செல்வம் நிலைத்திருக்க இன்றும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதே அன்னையின் அருளுக்குச் சான்றாக உள்ளது.


    புத்திர தோஷத்தால் அவதியுறுவோர் அன்னைக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அதனைப் பக்தியோடு தங்கள் நெற்றியில் சூடி வர விரைவில் தோஷம் நீங்கி மகப்பேறு வாய்க்கும் என்பது கண்கூடாக நடந்துவரும் நிகழ்வாகும்.மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்திருக்கோயிலில் வழிபாடு செய்வது அவசியம். மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு எலுமிச்சை மாலை சூடி வழிபட்டு வர நினைத்த காரியங்கள் கைகூடும் என்றும் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் அன்னையின் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் அன்னையை ஊஞ்சல் சேவையில் கண்குளிர தரிசனம் காண்பது கிடைத்தற்கரிய தரிசனமாகும்.


    பல பிறவிகளில் புண்ணியம் செய்து சேர்த்து வைத்துள்ள நற்பலன்களால் மட்டுமே ஒருவருக்கு அன்னையின் இந்த அரிய தரிசனம் வாய்க்கப்பெறும்.இம்மைக்கு மட்டுமல்லாமல் மறுமைக்கும் பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு திருத்தலம் ஶ்ரீகாளிகாம்பாள் சமேத ஶ்ரீகமடேஸ்வரா் திருத்தலம்.


ஆரவாரமிக்க சென்னையின் மையப்பகுதியான மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள இத்தலம் விஸ்வகர்மா சமூகத்தினரால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.


காலை 6.00மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும் இத்திருத்தலம்


By


முன்னூர் ரமேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி